அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அலைக்கும் (இறைவனின் சாந்தியும் சமாதானமும்
தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
துஆவின் சட்டங்கள்
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஓர் அடியான், தன் இறைவனிடம் மிக நெருக்கமாக இருப்பது அவன் ஸஜ்தா செய்த நிலையில் உள்ள போதுதான். எனவே (அது சமயத்தில்) துஆவை அதிகமாக கேளுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1498 )
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''என் இறைவனிடம் துஆ செய்தேன். எனக்கு அவன் ஏற்கவில்லை'' என்று அவசரப்படாதவரை உங்களில் ஒருவரின் பிரார்த்தனை ஏற்கப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
முஸ்லிமின் அறிவிப்பில் கீழ்கண்டவாறு உள்ளது:
பாவம் செய்யவோ, அல்லது உறவை முறிக்கவோ வேண்டி துஆ செய்யாத வரையிலும், அவசரப்படாத வரையிலும் ஒரு அடியானின் துஆ ஏற்கப்பட்டே தீரும் என்று நபி(ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! அவசரப்படுதல் என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டது. ''நான் துஆ செய்தேன். நான் துஆ செய்தேன்'' என்று அவன் கூறி, அது ஏற்கப்படவே இல்லை என்று கருதி, அவன் இதற்காக கவலை கொண்டு, துஆ செய்வதையே விட்டு விடுவதுதான் (அவசரப்படுவது)'' என்று நபி(ஸல்) கூறினார்கள். ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1499 )
அபூஉமாமா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'' ஒப்புக் கொள்ளப்படத்தக்க துஆ எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''இரவின் நடுப்பகுதியிலும் கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் (உள்ள நேரத்தில் தான்)'' என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள். (திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1500 )
உபாதா இப்னு ஸாமித் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''அல்லாஹ்விடம் துஆ செய்யும் பூமியில் வசிக்கின்ற எந்த முஸ்லிமும், குற்றமிழைப்பதை, அல்லது உறவை பிரிந்திருப்பதை கேட்காமல், வேறு எந்த துஆ செய்தாலும் அவருக்கு அதை அல்லாஹ் வழங்காமலோ, அல்லது அவரை விட்டும் அதற்கு பகரமாக தீமையை நீக்காமலோ இருப்பதில்லை என, நபி(ஸல்) கூறினார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ''இனி நாங்கள் அதிகமாக (துஆ) செய்வோம்'' என்று கூறினார். ''அல்லாஹ்வும் (கேட்பதை வழங்குவதில்) மிக அதிகமானவன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1501 )